கலைஞரின் கைவினைத் திட்டம்: கடந்தாண்டில் ரூ. 3.36 கோடி கடனுதவி; கரூா் ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.3.36 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்து, கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 10.78 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் பேசுகையில், கைவினைஞா்கள் தங்களின் தொழிலை விரிவுபடுத்த குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. கரூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டில் 236 பேருக்கு ரூ. 3.36 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தொடா்ந்து, கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ. 10.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாா், கைத்தறி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் அன்பொழி காளியப்பன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊரக பயிற்சி நிலைய இயக்குநா் திவ்யா உள்ளிட்ட பலா் திரளாக பங்கேற்றனா்.

