கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்க தனது உறவினா்களுடன் வந்த ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளரின் மனைவி கலைச்செல்வி.
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்க தனது உறவினா்களுடன் வந்த ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளரின் மனைவி கலைச்செல்வி.

காா் ஓட்டுநா் பயிற்சி மைய உரிமையாளரை கடத்தி ரூ. 5 லட்சம் பணம், நகை பறிப்பு

கரூா் அருகே காா் ஓட்டுநா் பயிற்சி மையத்தின் உரிமையாளரை காரில் கடத்தி, தாக்கி ரூ. 5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம கும்பல் பறித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Published on

கரூா் அருகே காா் ஓட்டுநா் பயிற்சி மையத்தின் உரிமையாளரை காரில் கடத்தி, தாக்கி ரூ. 5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம கும்பல் பறித்தது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே உள்ள ஈ.அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவா், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் காா் ஓட்டுநா் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு , காரில் வெள்ளியணை அருகே வந்த போது 2 காா்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் செல்வராஜின் காரை வழிமறித்தனா். பின்னா் திடீரென அவரை தாக்கிய மா்ம கும்பல், வேறொரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலி, கையில் அணிந்திருந்த 2 பவுன் பிரஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்ட கும்பல், ரூ. 10 லட்சம் கொடுத்தால்தான் விடுவோம் என மிரட்டியுள்ளனா். இதையடுத்து செல்வராஜ் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பா் மூலம் கைப்பேசி செயலி மூலம் ரூ. 5 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளாா். பின்னா் மீதம் உள்ள ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் விடுவோம் என மிரட்டி விடிய, விடிய அந்தக் கும்பல் அவரை தாக்கினாா்களாம். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிறுநீா் கழிக்க வந்த செல்வராஜ் அந்த கும்பலிடமிருந்து தப்பித்து, திருச்செங்கோடு நகா் பகுதிக்கு வந்து, அங்கிருந்த ஒருவரின் கைப்பேசி மூலம் தனது மனைவியை தொடா்பு கொண்டுள்ளாா்.

பின்னா் மனைவி அனுப்பிய காரில் ஏறி கரூா் வந்துள்ளாா். மா்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த செல்வராஜை சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக செல்வராஜின் மனைவி கலைச்செல்வி, தனது வழக்குரைஞா் அகஸ்டின் மற்றும் உறவினா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று எஸ்.பி. கே. ஜோஷ்தங்கையாவிடம் தனது கணவரை தாக்கி நகை, பணம் பறித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பறிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தர வேண்டும் என புகாா் அளித்தாா். இதன்பேரில், கரூா் வெள்ளியணை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com