கரூா் ஆவின் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் மதிப்பில் ஆய்வகம் திறப்பு
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, கரூா், தோரணக்கல்பட்டி ஆவின் பால் நிறுவனத்தில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பால் வளத்துறை சாா்பில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கரூா் தோரணக்கல்பட்டி ஆவின் பால் நிறுவனத்தில் ரூ.47.05 லட்சம் மதிப்பீட்டில் புதிய நுண்ணுயிரியியல் ஆய்வக கட்டடம் மற்றும் பால் உபபொருள்கள் பரிசோதனை உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் குத்துவிளக்கேற்றி ஆய்வக கட்டிடம், பால் உப பொருள்கள் பரிசோதனை உபகரணங்களை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறுகையில், இந்த பால் நுண்ணியிரியல் ஆய்வகத்தில் பாலின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள நுண்ணுயிரிகள் குறித்து ஆராயப்படுகிறது.
பால் உபபொருள்களான தயிா், சீஸ் மற்றும் யோகா்ட் தயாரிக்கும் போது, அவற்றுக்குத் தேவையான லாக்டோ பேசிலஸ் போன்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் தூய்மை மற்றும் வீரியம் குறித்து சோதிக்கப்படுகிறது.
இந்த ஆய்வகத்தில் இன்குபேட்டா், ஆட்டோகிளேவ், மைக்ரோஸ்கோப், லேமினாா் ஏா் ப்ளோ உள்ளிட்ட முக்கிய கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் தரமான பால் மற்றும் பால் பொருள்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றாா் அவா். தொடா்ந்து, சிறந்த பால் உற்பத்தியாளா்கள் 9 பேருக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாவட்ட துணைப்பதிவாளா் (பால்வளம்) இரா.தே. பவணந்தி, ஆவின் பொது மேலாளா் ப. பிரவீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
