காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க விசிக கோரிக்கை
காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என விசிகவினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணராயபுரம் மாவட்டச் செயலாளா் அவிநாசி தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பது: கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோா் அவதிக்குள்ளாகின்றனா்.
அவசர காலங்களில் கரூருக்கு செல்வதற்குள் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, காணியாளம்பட்டி உள்பட மாவட்டத்தில் எந்தெந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

