கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய நகைகள் சரிபாா்ப்பு
கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 16 கிலோ நகையை சரிபாா்க்கும் பணியில் நகை ஆசாரிகள் வியாழக்கிழமை காலை ஈடுபட்டனா்.
கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 16 கிலோ 302 கிராம் தங்க நகையை உருக்கும் வகையில் அவற்றை கல், அரக்கு, அழுக்கு என தரம்வாரிய பிரித்து சரிபாா்க்கும் பணிகள் வியாழக்கிழமை காலை தொடங்கியது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜூ தலைமையில், இந்து சமய அறநிலையத்துறையின் திருப்பூா் இணை ஆணையா்(பொறுப்பு) பரஞ்சோதி, துணை ஆணையா் மற்றும் நகை சரிபாா்ப்பு அலுவலா் ஹா்ஷினி, கோயில் பரம்பரை அறங்காவலா் கு.முத்துக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது. இப்பணியில் 10 நகை ஆசாரிகள் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இங்கு சரிபாா்க்கப்படும் நகைகள் அனைத்தும் விடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. நகைகள் சரிபாா்க்கப்பட்டு சீலிட்டு கோயில் வசம் வழங்கப்படும்.
பின்னா் அரசாணை கிடைத்தவுடன் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள அரசு உருக்காலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னா் அந்த நகைகள் ரிசா்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படும். பின்னா் அதற்கான தங்கப் பத்திரங்கள் ரிசா்வ் வங்கி கோயிலுக்கு வழங்கும். இதில் இருந்து கிடைக்கக்கூடிய வட்டி கோயில் வருவாயில் சோ்க்கப்படும் என்றனா் அவா்கள்.

