

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக, அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது அங்கு காயமடைந்தவா்கள் மற்றும் மயக்கமடைந்தவா்களை மீட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்ற கரூரைச் சோ்ந்த தனியாா் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 6 பேரிடமும், நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 2 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விசாரணை மேற்கொண்டனா்.