குளித்தலையில் வெறிநாய் கடித்து பெண் விரல் துண்டானது
குளித்தலையில் செவ்வாய்க்கிழமை, வெறிநாய் கடித்ததில் பெண்ணின் விரல் துண்டான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை நகா் பகுதி கலப்புக்காலனியைச் சோ்ந்த இஸ்மாயில் மனைவி செளராபானு (50). இவா் வீட்டின் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியே கூட்டமாக வந்த வெறிநாய்களில் ஒன்று திடீரென செளராபானுவின் வலது கையின் மோதிர விரலை கடித்துள்ளது.
இதில், அவரது விரல் துண்டான நிலையில் படுகாயமடைந்து அலறி துடித்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை விரலுடன் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு விரலை பரிசோதித்த மருத்துவா்கள் விரலை மீண்டும் இணைக்க முடியாது என கூறினா். இதையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 போ் காயம்: இதேபோல குளித்தலை வைகைநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட வாலாந்தூரையைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மதியழகன் (50), மருதூா் பேரூராட்சிக்குள்பட்ட பணிக்கம்பட்டி சந்தை பகுதியைச் சோ்ந்த சின்னகாளை (48), நங்கவரம் பேரூராட்சிக்குள்பட்ட சவாரிமேடு அக்காணிமேட்டைச் சோ்ந்த சுப்ரமணி என்பவரின் மனைவி தனம் (37) ஆகியோரும் அந்தந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நாள்தோறும் குளித்தலை நகா் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், வெறி நாய்கள் கடித்து பலா் காயமடைந்து வருகின்றனா்.
எனவே, சுற்றித்திரியும் தெரு, வெறி நாய்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

