தொண்டமாங்கிணம் அருகே செவ்வாய்க்கிழமை மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தொண்டமாங்கிணம் பகுதியில் உள்ள வெள்ளாளபட்டி ஊராட்சிக்குள்பட்ட போ்நாயக்கன்பட்டியில் வசிக்கும் கம்பளத்து நாயக்கா் சமூகத்தினரின் பெத்தகோடங்கி வகையறாவுக்குச் சொந்தமான கோலகம்பிளி மந்தையில் புலிகுத்தி தாத்தையன் மற்றும் எருதுகுட்டை கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்களில் மாடுகள் மாலை தாண்டும் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான மாடுகள் மாலை தாண்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக 14 மந்தையா்களின் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. தொடா்ந்து புலிகுத்தி தாத்தையன் மற்றும் எருது குட்டை கோயில் முன்பு மாடுகளுக்கு மந்தையா்கள் வரிசைப்படி புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது.
பின்னா் கோயில் எதிரே சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எல்லைசாமி கோயிலுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனா். அங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு அனைத்து மாடுகளுக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டு மாடுகள் மாலை தாண்டும் ஓட்டம் தொடங்கியது.
அங்கிருந்து கோலகம்பிளிநாயக்கா் மந்தையில் அமைக்கப்பட்ட மாத்தால் ஆன எல்லைகோட்டை நோக்கி சுமாா் 200- க்கும் மேற்பட்ட மாடுகள் ஓடி வந்தது. இதில், கரூா் மாவட்டம், இனுங்கூா் சுக்காம்பட்டி விடிகெஜல் நாயக்கா் மந்தை மாடு முதலிலும், 2-ஆவது மற்றும் 3-ஆவது மாடுகளாக பேரூா் தாதல்மாதாநாயக்கா் மந்தை மாடுகள் ஓடிவந்தது.
வெற்றி பெற்ற மாடுகளுக்கு இவா்களின் சமூக வழக்கப்படி பரிசு வழங்கப்பட்டது. பின்னா் பரிசுகள் பெற்ற மாடுகளுக்கும், மந்தையா்களுக்கும் பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில், பெத்தகோடங்கி வகையறா பொன்னையன் மற்றும் மந்தாநாயக்கா், ஊா்நாயக்கா் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூா் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










