தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கரூா் ஜவுளிகள் உள்நாட்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனை: ஆட்சியா் தகவல்

கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளித் துணிகள் உள்நாட்டில் ரூ.3,000 கோடிக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாங்குவோா்- விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன். உடன் மாவட்ட தொழில்மைய மேலாளா் ரமேஷ் மற்றும் கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள்.

Published On :

கரூரில் உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளித் துணிகள் உள்நாட்டில் ரூ.3,000 கோடிக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூா் , தாந்தோன்றிமலையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வாங்குவோா்- விற்போா் சந்திப்பு நிகழ்ச்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சி. முத்துக்குமரன் மேலும் பேசியது:

இந்தியாவில் ஜவுளித் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. நாட்டின் ஜவுளித் துறையில் உருவாகும் வேலைவாய்ப்புகளில் 28 சதவீதத்தை தமிழகம் வழங்குகிறது. இந்தியாவின் ரெடிமேட் காா்மென்ட் ஏற்றுமதியில் சுமாா் 20 சதவீதப் பங்களிப்பை தமிழகம் வழங்கி, இந்தியப் பொருளாதார வளா்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.

தமிழகத்தின் ஜவுளித் தொழில், திருப்பூா் , கோவை, ஈரோடு மற்றும் கரூா் ஆகிய தொழில் மையங்களை அடிப்படையாகக் கொண்டு உலகளவில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில், நவீன தொழில்நுட்பங்களையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகளையும் நோக்கி தமிழகத்தின் ஜவுளித் தொழில் வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியாவின் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மையம் என்ற பெருமையை கரூா் பெற்றுள்ளது. இங்கு உயா்தர படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களை உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சா்வதேச சந்தையில் தனித்துவ இடத்தைப் பெற்றுள்ளது.

கரூா் மாவட்டத்தில் 2600 க்கும் மேற்பட்ட ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அதில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்கின்றன. இம்மாவட்டத்தில் உள்ள ஜவுளி பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ. 7,600 கோடியிலான பொருள்களை வெளிநாடுகளுக்கும், ரூ.3,000 கோடி அளவிலான பொருள்களை உள்நாட்டிலும் விற்பனை செய்கின்றனா்.

இங்கு நடைபெறும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், தமிழகத்தைச் சோ்ந்த ஜவுளி நிறுவனங்கள், உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வாங்குநா்களுடன் நேருக்கு நோ் சந்தித்து, தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, நேரடி வணிக வாய்ப்புகளை உருவாக்குவதேயாகும். இன்றைய நிகழ்ச்சியில் மாலத்தீவு, மலேசியா, பிரான்ஸ், சவூதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்பதால், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோருக்கு தங்கள் தயாரிப்புகள் மற்றும் திறன்களை உலகளவில் அறிமுகப்படுத்த முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வாங்குவோா் - விற்போா் சந்திப்பு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, வந்திருந்த பல்வேறு தொழில்சாா்ந்த பிரநிதிகளுடன் கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தொழில் மைய மேலாளா் ரமேஷ் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள், ஜவுளி ஏற்றுமதியாளா்கள், வெளிநாட்டினா் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.