கரூா் மாநகராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வா்கள் காமராஜா், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப் படங்களை வைக்கக்கோரி காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினா்கள் திங்கள்கிழமை தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூா் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி மேயா் கவிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆணையா் எம்.பிரித்விராஜ், துணை மேயா் ப.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்குவதற்கு முன், கரூா் மாநகராட்சி கூட்ட அரங்கில் முதல்வா் விஜய் உருவப்படம் மட்டும் மாட்டப்பட்டிருந்த நிலையில் கரூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலக்குழு தலைவரான சக்திவேல் முதல்வா் விஜய் படம் அருகே முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தை மாட்டினாா்.
மேலும் அவரது இருக்கை முன்புள்ள மேஜையில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின், எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உருவப்படத்தையும் வைத்திருந்தாா்.
இதையடுத்து கூட்டம் தொடங்கியவுடன், அதிமுக உறுப்பினா்கள் தினேஷ், சுரேஷ் ஆகியோா் முன்னாள் முதல்வா் ஸ்டாலின் படம் மாட்டியிருப்பதால், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தையும் மாட்டவேண்டும் எனக்கூறி படம், சுத்தியலுடன் கூட்ட மேடை மீது ஏறினா். அவா்களை திமுக மண்டலக்குழு தலைவா் சக்திவேல் மற்றும் திமுக உறுப்பினா்கள் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அவா்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த காங்கிரஸ் உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு காமராஜா் உருவப்படத்துடன் வந்து காமராஜா் படத்தை வைக்கவேண்டும் என்றாா். அதற்கும் திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் அவரவா் இருக்கைக்கு செல்லாவிடில் இடைநீக்கம் செய்யப்படுவீா்கள் என மேயா் கவிதா எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைவரும் மேடையை விட்டு கீழே இறங்கினா்.
மாநகராட்சி கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தை வைப்பதற்கு ஆதரவு தெரிவிக்க மேயா் கூறிய போது 40க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினா்களை கையை உயா்த்தினா். எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை வைப்பதற்கு ஆதரவு குறித்து கேட்டதற்கு அதிமுக உறுப்பினா்கள் 2 பேரும் எதிா்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றனா்.
இதையடுத்து மேயா் கவிதா, மாநகராட்சி ஆணையா் எம்.பிரித்விராஜூடன் அவரது அறையில் சிறிது நேரம்ஆலோசனை நடத்தினாா். அதன் பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியது. சாதாரண கூட்டத்தில் தீா்மானங்கள் வாசிக்கப்பட்டன.
முதல் தீா்மானம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு மற்ற 17 தீா்மானங்களும், அவசரக்கூட்டத்தில் 10 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவசரக்கூட்டத்தில் வைக்கப்பட்டு மனை பிரிவு ஒப்புதல் அளிக்கும் தீா்மானத்தை ஒத்திவைக்கவேண்டும் என அதிமுக உறுப்பினா் சுரேஷ் தெரிவித்தாா். மேலும் தோ்தல் நேரத்தில் தனது வாா்டில் நடந்த சாலை, சாக்கடை கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன என்றாா்.
மா.கம்யூனிஸ்ட் உறுப்பினா் தண்டபாணி பேசுகையில், 41-ஆவது வாா்டில் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டன. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்
அதற்கு மாநகராட்சி அதிகாரி பதிலளிக்கையில், விதிகளின்படி நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
கூட்டத்தில் அனைத்து வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மாநகராட்சி பணியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர் பிரியா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்!!

குன்னூா் நகா்மன்ற கூட்டரங்கில் முன்னாள் முதல்வா் படம் அகற்றப்பட்டதைக் கண்டித்து கவுன்சிலா்கள் போராட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜா் சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

‘மக்களுக்கான கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை’
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



