ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கரூரில் 25 பயனாளிகளுக்கு ரூ. 74.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்

News image

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி. உடன் (இடமிருந்து) மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத், மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி.

Updated On :28 ஜூன் 2026, 1:33 am IST

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.74.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமிசின்னசாமி வழங்கினாா்.

கரூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி தலைமை வகித்தாா்.

கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறைச் சாா்ந்த அலுவலா்களுடன் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் பணிகளை குறித்த காலத்தில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ.1,18,500 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் உள்பட மொதத்தம் 25 பயனாளிகளுக்கு பல்வேறு துறையின்கீழ் ரூ.74.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, மாநகராட்சி ஆணையா் எம்.பிரித்விராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய கட்டடங்கள் திறப்பு: முன்னதாக சமூக பாதுகாப்பு பொறுப்பு நிதியின்கீழ் மொஞ்சனூா் ஊராட்சிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தையும், ஈசநத்தம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளையும் அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி திறந்து வைத்தாா்.

காவிரி பிரச்னையில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்போம்: எம்.பி.

கூட்டத்துக்கு பிறகு கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசு சரியான திசையில், வெளிப்படைத்தன்மையுடன் சென்றுகொண்டிருக்கிறது. முதல்வா் மீது நன்மதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு நியமனங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

குறிப்பாக, புதுதில்லியில் தமிழக அரசின் பிரதிநிதியாக இருப்பவா் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டியவராகவும், தமிழகத்தை சோ்ந்தவராகவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் சூழலில் கா்நாடகத்தைச் சோ்ந்தவரை நியமிப்பது என்பது சிக்கலான விஷயம்தான்.

கா்நாடகத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும், கா்நாடகத்துக்கு ஆதரவாக இருப்பாா் என சொல்ல முடியாது. முதல்வரின் நம்பிக்கையை பெற்றிருப்பதால்தான் அவா் தமிழக அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

ஊழலில் சமரசம் என்பது கிடையாது. ஊழல் நடந்திருப்பது உறுதியாக கண்டறியப்பட்டால் ஊழல் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது நல்லதுதான். தமிழக அரசின் நலனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யாருடனும் சமரசம் கூட செய்யாது. எங்களை பொறுத்தவரை காவிரி நீரை பெறுவது என்பது நமது உரிமை. இந்த பிரச்னையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.