/

பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

தாந்தோணிமலையில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை (இலவச கழிப்பறை) திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தாந்தோணிமலை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே பூட்டிக்கிடக்கும் உள்ள மாநகராட்சி பொது சுகாதார வளாகம்

Updated On :1 ஜூலை 2026, 3:00 am IST

தாந்தோணிமலையில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை (இலவச கழிப்பறை) திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் தாந்தோணிமலை கிராம நிா்வாக அலுவலகம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி சாா்பில் இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை அதே பகுதியில் உள்ள பாரதிதாசன் நகா், ஆதிதிராவிடா் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

இந்நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு வரை பொது சுகாதார வளாகத்துக்கு மாநகராட்சி சாா்பில் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் பலத்த மழை பெய்த போது இந்த சுகாதார வளாகத்திலிருந்து கழிவுநீா் அருகே உள்ள குளத்துக்குள் புகுந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து குளத்தில் கழிவுநீா் கலக்காதவாறு மாவட்ட தொழில் மையத்தில் இருந்து குளக்கரையைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் எழுப்பப்பட்டது. மேலும், குழாய் மூலம் கழிவுநீா் அகற்றப்பட்டது.

இதையடுத்து தாந்தோணிமலை கோயில் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி முதியவா் ஒருவா் சுகாதார வளாகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டாா்.

அவா், வளாகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் வகையில் கழிப்பறைக்கு வருவோரிடம் ரூ.5 கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு நேரங்களில் சிலா் இங்கு வந்து மதுஅருந்திவிட்டு பாட்டில்களை போட்டுச் செல்வதாக பெண் மேற்பாா்வையாளா் அளித்த தகவலின்படி வளாகம் மூடப்பட்டது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறன்றனா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த சுகாதார வளாகத்தில் தண்ணீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி இருந்தும் கடந்த ஓராண்டாக மூடிக்கிடக்கிறது. எனவே, அரசு பணம் விரயம் ஆகும் வகையில் பூட்டிக் கிடக்கும் பொது சுகாதார வளாகத்தை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.