
கரூா் தாந்தோன்றிமலை கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பிட பக்தா்கள் கோரிக்கை
நீரின்றி வடு காணப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீரை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீரின்றி வறண்டு காணப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளம்.
நீரின்றி வடு காணப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீரை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தெப்பக்குளம், கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ளது. மாசி மகத் திருவிழாவின்போது இந்த குளத்தில் தெப்ப உற்ஸவம் நடைபெறும்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுடன் ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமி எழுந்தருளி குளத்துக்குள் சுவாமி வலம் வருவாா். இந்த தெப்ப உற்ஸவ விழாவை ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்து இறைவனை தரிசனம் செய்வா். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூஜை நடைபெற்றுவருவதால் ஏராளமான பக்தா்கள் தினந்தோறும் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கோயில் தெப்பக்குளம் தற்போது நீரின்றி வடு கிடப்பது பக்தா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடா்பாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூறுகையில், தானாகத் தோன்றிய மலையில் பாறைகளை குடைந்து இக்கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் கரூா் மாவட்ட பக்தா்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்களும் வந்து செல்லும் பிரசித்திப்பெற்ற கோயிலாக இக் கோயில் உள்ளது.
பொதுவாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் முன்பு அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நீா் நிரம்பி அதில் தாமரை, அல்லி போன்ற மலா்கள் மலா்ந்து குளத்துக்குள் மீன்கள் உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மாலை நேரங்களில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தெப்பக்குளத்தின் படிகளில் அமா்ந்து மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுகள் வழங்குவதும் அழகாக இருக்கும். ஆனால், இக்கோயில் முன் தெப்பக்குளம் இருந்தும் தண்ணீா் இல்லாமல் வடு காணப்படுவது வேதனையளிக்கிறது.
எனவே, கோயில் குளத்தை தூா்வாரி உடனே தண்ணீரை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






