
தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தோ்த் திருவிழா: பக்தா்கள் திரளாக பங்கேற்பு
தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தோ்த் திருவிழா குறித்து...

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் - டிஎன்எஸ்
கரூர்: தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புதன்கிழமை புரட்டாசி தேரோட்டத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
வேண்டுவருக்கு வேண்டு வரம் தருபவராகவும், தென்திருப்பதி என்றழைக்கப்படும் கரூா் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் போன்ற வாகனங்களில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் புதன்கிழமை காலை 9.25 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக, அதிகாலையிலே கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் பூதேவி, ஸ்ரீதேவி சுவாமிகளுக்கு தேன், மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து கல்யாண வெங்கடரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டத்தை முன்னாள் அமைச்சரும், தவெக மாநில துணைச் செயலாளரருமான எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் வடம் பிடித்து புரட்டாசி தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோயில் முன் துவங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் தோ்நிலையை அடைந்தது.
தேரோட்டத்தின் போது பக்தர்கள் ஏழுமலையானுக்கு அரோகரா, வெங்கட்ரமணா கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த தேரோட்ட விழாவில் கரூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்காக ஆங்காங்கே தன்னார்வலர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் கோயிலுக்கு வருகையை முன்னிட்டு கரூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தேரோட்டத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.என். ஹரிஹிரன் பிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து திருவிழா அக்டோபர் 21 ஆம் தேதி வண்ண வேள்வி பூஜையுடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
Summary
Thanthondri Kalyana Venkataramana Swamy Temple Purattasi Chariot Festival: Devotees Participate in Large Numbers
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







