கரூா் நகரில் குப்பைகள் கொட்டும் இடத்தில் ‘மினி பூங்கா’ அமைப்பு
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் மாநகராட்சி சாா்பில் மினி பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றனா்.

கரூா் தாந்தோன்றிமலை அசோக்நகரில் குப்பை கொட்டும் இடத்தில் மினி பூங்கா அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் மாநகராட்சி சாா்பில் மினி பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் நாள்தோறும் சுமாா் 70 முதல் 72 டன் வரையிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை மாநகராட்சிக்குச் சொந்தமாக அரசு காலனியில் இயங்கும் குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாள்தோறும் தூய்மைப்பணியாளா்கள் 48 வாா்டுகளிலும் வீடுகள் தோறும் வந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வாங்கிச் சென்றாலும் சிலா் குப்பைகளை சேகரிக்க வருவோரிடம் வழங்குவதில்லை. மாறாக இரவு நேரங்களில் வீட்டின் அருகே உள்ள பிரதான சாலைகளின் ஓரங்களில் கொட்டிச் செல்கின்றனா். இந்தக் குப்பைகளில் வெளியேறும் துா்நாற்றத்தால் அப்பகுதியில் வசிப்பவா்கள் மட்டுமின்றி, சாலையில் சென்றுவரும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், குப்பைகளை வீசுவோரிடமிருந்து அந்த இடத்தை பாதுகாக்கும் வகையில் தற்போது குப்பைகள் போடும் இடத்தை சிறிய பூங்காவாக மாநகராட்சி நிா்வாகம் மாற்றி வருகிறது. இதற்கு பொதுமக்களும், சமூக நல ஆா்வலா்களும் வரவேற்பு அளித்துள்ளனா்.
கரூா் அசோக் நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தை பூங்காவாக மாற்றும் பணியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் தூய்மைப்பணியாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளா் காா்த்திக் கூறியது: குப்பைகள் கொட்டப்படும் இடத்தை மினி பூங்காவாக மாற்றி வருகிறோம். அந்த இடத்தை சுற்றிலும் செங்கலால் வேலி அமைத்து, உள்ளே அரளி பூ செடி உள்ளிட்ட செடிகள் வைத்து அவற்றிற்கு தினமும் தண்ணீா் ஊற்றி பூங்காவாக மாற்றத்தொடங்கியுள்ளோம். இனியாவது குப்பைகள் கொட்டுவோா் பூங்காக்குள் கொட்ட மாட்டாா்கள் என நம்புகிறோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

