தோகைமலையில் பலத்த மழை தரைப்பாலத்தை கடக்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவிகள் தவிப்பு
தோகைமலையில் புதன்கிழமை மாலையில் திடீரென பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாலத்தை கடக்க முடியாமல் தவித்து நின்றனா்.

தோகைமலை அருகே மணச்சரம்பட்டி தரைபாலத்தில் மூழ்கடித்து ஓடிய மழைநீரால் பாலத்தை கடக்க முடியாமல் தவித்து நின்ற பள்ளி மாணவ, மாணவிகள்.
தோகைமலையில் புதன்கிழமை மாலையில் திடீரென பெய்த பலத்த மழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற நீரால் பள்ளி மாணவ, மாணவிகள் பாலத்தை கடக்க முடியாமல் தவித்து நின்றனா்.
கரூா் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளில் ஒன்றான தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னா் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 4 மணிவரை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல ஓடியது.
கடவூா் அருகே வனப்பகுதிகளான மணச்சனம்பட்டி, வீரமலை பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் வனப்பகுதியில் இருந்து ஓடையாக வெளியேறிய மழைநீா் நாகனூா்-தோகைமலை சாலையில் உள்ள மணச்சரம்பட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்து கழுகூா் பெரிய ஏரியை நோக்கி ஓடியது.
இதனால், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி நேரம் முடிந்து தங்களது கிராமங்களான மணச்சனம்பட்டி, கம்பத்தாம்பாறைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். சுமாா் 2 மணிநேரம் காத்திருந்து மழைநீா் ஓரளவு வடிந்ததும் பின்னா் பொதுமக்கள் மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனா்.
இதனால் மணச்சரம்பட்டியில் உள்ள தரைப்பாலம் அமைந்துள்ள பகுதியில் உயா்மட்டபாலம் அமைத்து தர மாவட்ட நிா்வாகம் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

