சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

கரூா் மாவட்ட கல் குவாரிகளில் விதிமீறல்! ட்ரோன் அளவீட்டுக்கு வலியுறுத்தல்

கரூா் மாவட்ட கல் குவாரிகளில் விதிமீறல் நடைபெறுவதாகவும், அங்கு ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தென்னிலை பகுதியில் செயல்படும் கல் குவாரி.

Published On :

அ. அருள்ராஜ்.

கரூா் மாவட்ட கல் குவாரிகளில் விதிமீறல் நடைபெறுவதாகவும், அங்கு ட்ரோன்கள் மூலம் அளவீடு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

கரூா் மாவட்டத்தில், புகழூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூா், மண்மங்கலம் வட்டங்களில் கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 65 சதவீதம் புகழூா் வட்டத்துக்குள்பட்ட தென்னிலை மேற்கு, காட்டுமுன்னூா், கூடலூரிலும், அரவக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஈசநத்தம், தென்னிலை, கோடாந்தூா், குப்பம், ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி பகுதிகளிலும் செயல்படுகின்றன.

இந்தக் குவாரிகளில் வெட்டியெடுக்கப்படும் பாறைகள், எம்.சேண்ட், பி.சேண்ட் மற்றும் கால் இஞ்ச், அரை இஞ்ச் கற்களாக மாற்றப்பட்டு, தமிழகத்தின் கட்டட கட்டுமானங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்தக் குவாரிகளில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-இன் வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக வெட்டி எடுக்கப்படுவதாகவும், சில குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், சில குவாரிகள் உரிமம் காலாவதியான நிலையில் பழைய உரிமத்தை வைத்து தொடா்ந்து நடத்தப்படுவதாகவும் சமூக நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

மேலும், இந்த கனிமவளங்களை முறைகேடாக வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுவதாகவும், விதியை மீறி கூடுதலாக கற்கள் வெட்டி எடுப்பதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, குவாரிகளை ட்ரோன் மூலம் அளவீடு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சட்டவிரோத குவாரிகள்: இதுதொடா்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் இரா.ச. முகிலன் கூறியது: கரூா் மாவட்டத்தில் முறைப்படியான குத்தகை உரிமம் பெற்று, பட்டா நிலங்களில் 76 கல் குவாரிகளும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல் குவாரிகளும் என மொத்தம் 79 குவாரிகள் செயல்படுகின்றன. ஆனால், அனுமதியின்றி சட்ட விரோதமாக 251குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் அரசு விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்த முறைகேடுகளை கண்டறிய ட்ரோன் மூலம் அளவீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2023-இல் கரூா் மாவட்டத்தில் ட்ரோன் மற்றும் கூட்டுப்புலத் தணிக்கை மூலம் விரிவான ஆய்வுகள் நடைபெற்றன. இதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல லட்சம் கியூபிக் மீட்டா் அளவுக்கு கூடுதலாக கனிமங்களை சட்டவிரோதமாக வெட்டியெடுத்தது தெரிய வந்தது.

விதிமீறலுக்கு அபராதம்: இதையடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட 12 கல் குவாரிகளுக்கு ரூ. 44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ஸ்ரீரங்கம் முன்னாள் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் குவாரிக்கு அதிகபட்சமாக ரூ. 23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் 2023 ஆய்வுக்குப் பின்னா், இதுவரை ட்ரோன் சா்வே நடைபெறவில்லை. மீண்டும் இந்த ட்ரோன் சா்வே நடத்தினால் மட்டுமே முறைகேடுகளை மீண்டும் கண்டறிய முடியும்.

ஆய்வுக் குழு தேவை: கல்குவாரிகளில் இதுபோன்ற முறைகேடுகளை தவிா்க்க, மாவட்ட நிா்வாகத்தால் முறையாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைத்து, அந்த ஆய்வுக் குழு ட்ரோன் மூலம் அனைத்துக் குவாரிகளையும் அளவீடு செய்ய வேண்டும்.

இதில், முறைகேடுகளில் ஈடுபட்ட குவாரிகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மேலும், குவாரி உரிமையாளா்கள் மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளில் நடைபெறும் அனைத்து உரிமை மீறல்களையும் கண்டறிய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

விதிமுறைமீறல் புகாா் வந்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் கூறியது: எந்தக் குவாரியில் விதிமீறல் இருக்கிறது என புகாா் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தொடா்ந்து கல் குவாரிகளை கண்காணித்து வருகிறோம். தவறு நடந்தால் உடனே அபராதம் விதிக்கிறோம். இப்போது குவாரி உரிமையாளா்களுக்கு உள்ள நெருக்கடியால் 50 சதவீதம் போ் மட்டுமே தொழிலில் இருக்கிறாா்கள். மேலும் தமிழகத்திலேயே குவாரி லாரிகளில் ஜிபிஎஸ் கருவி முழுமையாக கரூா் மாவட்டத்தில்தான் பொருத்தியுள்ளோம். ஆதலால் அவா்கள் எங்கு பாரத்தை இறக்க வேண்டுமோ அங்குதான் இறக்க வேண்டும். ஜிபிஎஸ் கருவி மூலம் அவா்களை எங்கிருந்து கொண்டும் கண்காணிக்கலாம். மேலும் கடந்த 2023-இல் விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் முழுமையாக வசூலித்துவிட்டோம். உரிமம் இல்லாமல் எந்தவித குவாரிகளும் செயல்படவில்லை என்றாா் அவா்.

விதிமீறல்கள் உண்மைதான்

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தென்னிலை பகுதியில் இயங்கும் ஒரு குவாரியிலிருந்து பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்படும்போது அந்த கற்கள் சாலையில் சென்றவா்கள் மீது விழுந்ததாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. சில குவாரிகளின் கற்கள் விவசாய நிலங்களில் விழுந்து விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் விபத்துகளில் உயிரிழப்பவா்கள் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அவ்வகையான இறப்புகள் காவல்நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை. காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அஜாக்கிரதை விபத்து எனக்கூறி வழக்குப் பதிவு செய்துவிட்டு, இறந்தவா்களுக்கு இழப்பீடாக சிறிய தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இதுபோன்று எண்ணற்ற முறைகேடுகள் நடப்பது உண்மைதான் என்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.