
குளித்தலை பகுதியை காவிரி டெல்டா மண்டலமாக அறிவிக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. பிரசாரம்

குறிச்சியில் தொடங்கிய பிரசார இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் மா. ஜோதிபாசு.
குளித்தலை கோட்டத்தை காவிரி டெல்டா மண்டலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து குளித்தலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன பிரசார இயக்கம் மேற்கொண்டனா்.
குறிச்சியில் தொடங்கிய இந்தப் பிரசாரத்தை கட்சியின் மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு கொடியசைத்து தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பிரச்சாரத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. ராஜூ, ஒன்றியச் செயலா் இரா.முத்துச்செல்வன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் டி.இளங்கோவன், காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.ஜெயராமன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
குளித்தலை கோட்டத்தை காவிரி டெல்டா மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி ஆற்றில் கரூா் மாவட்டம், மருதூருக்கும், திருச்சி மாவட்டம், உமையாள்புரத்துக்கும் இடையே ரூ.750 கோடி செலவில் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள கதவணை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குளித்தலை ஒன்றியத்தில் நங்கவரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும்.
கரூா் மாவட்டம் குமாரமங்கலத்தில் கொண்டுவரப்பட உள்ள விவசாயத்தை பாதிக்கும் எத்தனால் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கும் முடிவை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த இருசக்கர வாகன பிரசார இயக்கம் குறிச்சியில் தொடங்கி, நெய்தலூா் காலனி, நங்கவரம், இனுங்கூா், குமாரமங்கலம், ராஜேந்திரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன் நிறைவடைந்தது.
முன்னதாக, குறிச்சி கட்சி கிளைச் செயலா் எம். சித்தராசு வரவேற்றாா். பிரசாரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






