பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் களையிழந்து வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வாசிப்புத் திறனை அதிகப்படுத்தவும், பொதுமக்களிடையே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டதே இந்த புத்தகக் கண்காட்சி.
இந்த மாவட்ட மக்களை பொருத்தவரை திருச்சி, சென்னை, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பலூரில் கடந்த 2012-ல் முதன்முதலாக புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டது.
கண்காட்சி தொடங்கப்பட்ட ஆண்டில் ரூ. 28,81,626 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. சிறிய நகரமான, பெரம்பலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கையும், பொது மக்களின் வருகையும் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம் என்றாலும், புத்தகப் பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இது ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
அதைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்த முடிவெடுக்கப்பட்டு, 2-வது முறையாக 2013-ல் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 97 லட்சம் மதிப்பிலான புத்தகங்களும், 2014-இல் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2016-இல் ரூ. 1.81 கோடி மதிப்பிலான புத்தகங்களும், 2017-இல் நடைபெற்ற கண்காட்சியில் ரூ. 1.70 கோடி மதிப்பிலான புத்தகங்களும் விற்பனையானது.
இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் தொடங்கிய 7-வது புத்தகக் கண்காட்சி பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இக் கண்காட்சியில், 100 அரங்குகளில் தலைசிறந்த 90 பதிப்பகங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்துக்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இங்கு, மொபைல் ஏ.டி.எம், சிறுதானிய உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு உலக திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அதோடுமட்டுமன்றி, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் பட்டிமன்றமும் நடைபெற்று வருகிறது.
அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதால், பதிப்பாளர்கள் ஆர்வமுடன் இப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டுகளை விட தற்போது நடைபெறும் கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் புத்தகப் பிரியர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு இருந்தது. இதனால், ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் இரவு 10 மணி வரை அரங்குகளில் வலம் வந்ததோடு, நூல்களின் விற்பனையை அதிகப்படுத்த ஆலோசனை மேற்கொண்டனர். ஆனால், நிகழாண்டு எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால், அலுவலக உதவியாளர்கள் கூட வரவில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலோ, புத்தகங்களை வாங்குவதற்கோ அறிவுறுத்தவில்லை.
இதனால் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும் நேரங்களில் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.
அதேபோல, புத்தகக் கண்காட்சி நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் பொதுமக்களின் வருகை குறைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 5 நாள்களாக நடைபெற்ற கண்காட்சியில், இதுவரை சுமார் 25 ஆயிரத்துக்கும் குறைவான நபர்களே வந்துள்ளதால், நூல்களின் விற்பனையும் குறைந்துள்ளது.
இதுகுறித்து, விற்பனையாளர் ஒருவர் கூறியது:
கடந்த 5 நாள்களாக ரூ. 6 ஆயிரத்துக்கு மட்டுமே நூல்கள் விற்பனையாகி உள்ளது. ஆனால், ரூ. 9 ஆயிரம் வாடகை செலுத்தியுள்ளேன், வாகன ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, தங்கும் அறை, உணவு உள்பட சுமார் 15 ஆயிரம் செலவாகும். கடந்த ஆண்டைப்போல விற்பனை கிடையாது. பொதுமக்களின் வருகை மிகவும் குறைந்துள்ளது. இங்கு வரும் ஒன்றிரண்டு மாணவர்கள் 10 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். இதேநிலை நீடித்தால், செலவிட்ட தொகையைக்கூட எடுக்க முடியாது என்றார் அவர்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது:
வழக்கம்போல, ஜனவரி மாத இறுதியில் தொடங்கி இருந்தால் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கும். தற்போது, அரசுப் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் மாணவர்கள் வரவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் கவனக் குறைவால் புத்தகக் கண்காட்சி வலுவிழந்து வருகிறது. இக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமானால், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றார் அவர்.
பெரம்பலூர் மாவட்ட மக்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்தப் புத்தகக் கண்காட்சி, தற்போது களையிழந்து வருவது பதிப்பாளர்களிடமும், விற்பனையாளர்களிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.