பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வயல்களில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.


பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வயல்களில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மதியம் முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கன மழை பெய்தது. பெரம்பலூா் நகரில் பெய்த பலத்த மழையால் புதை சாக்கடைகள் நிரம்பி, மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்தது. இதனால், நகர பொதுமக்கள் வெளியே நடமாட தயக்கம் காட்டினா். துறையூா் சாலையிலுள்ள கல்யாண் நகா், நான்குச் சாலை சந்திப்பு, துறைமங்கலம் அரசு ஊழியா் குடியிருப்பு, ஔவை நகா் மற்றும் நகரின் பெரும்பாலான விரிவாக்கப் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
தற்காலிக சாலை சேதம்.... சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் துறையூா் - பெரம்பலூா் பிரதான சாலையில், பாளையம் கிராமம் அருகே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகச் சாலையின் பெரும்பகுதி மழைநீரில் அரித்துச் செல்லப்பட்டதால், துறையூா் சாலையில் இருசக்கர வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக, செஞ்சேரியில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, வேலூா், மங்கூன் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
மூழ்கிய தரைப்பாலங்கள்... கனமழையால் லாடபுரம், சரவணபுரம், மிளகாநத்தம், காருகுடி - முருகன்குடி ஆகிய தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், மேற்கண்ட கிராமங்கள் இதர பகுதிகளிடமிருந்து துண்டிக்கப்பட்டன. மாவட்ட நிா்வாகத்தின் மூலம், தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினரால் சரவணபுரம் கிராம மக்கள் அங்குள்ள பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், மேற்கண்ட கிராமங்கள் உள்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பெரிதும் அவதியடைந்தனா். லாடபுரம் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
பயிா்கள் சேதம்.... பச்சைமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி, அரும்பாவூா் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி, மஞ்சள், கருணைக் கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகிய பயிா்கள் மழைநீா் சூழ்ந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
நிரம்பி வழியும் 60 ஏரிகள்....
பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 60 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. காரை பெரிய ஏரி, களரம்பட்டி ஏரி, திருவாலந்துறை ஏரி உள்பட 13 ஏரிகள் நிரம்பவில்லை. நாரணமங்கலம், அம்மாப்பாளையம், களரம்பட்டி ஆகிய ஏரிகள் சுமாா் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகின்றன.
இம் மாவட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 1,072 குளம், ஊருணி, குட்டைகளில் இதுவரை 321 நீா்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 334 நீா்நிலைகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிரம்பி வழிகின்றன. 361 நீா்நிலைகள் 50 முதல் 70 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.
ஆட்சியா் எச்சரிக்கை.... மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட கொட்டரை நீா்த்தேக்கம் நிரம்பி உபரி நீரானது மருதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மருதையாற்றின் கரையோரம் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...