/

பெரம்பலூர் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:04 am

DIN

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

சீர்காழியைச் சேர்ந்த முனியப்பன், கரூரில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முனியப்பன் அவரது மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகில் ஆகிய 5 பேரும் காரில், கரூரிலிருந்து  சொந்த ஊரான சீர்காழி நோக்கிச் சென்றனர். 

கார் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை அருகே முன்னாள் சென்ற ஈச்சர் வாகனத்தின் மீது மோதி நின்றது. அப்போது, தொடர்ந்து பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கார் முன்னால் நின்ற ஈச்சர் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. 

இவ்விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த முனியப்பன் அவரது மனைவி, தாய், மகள் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 வயது மகன் கார்முகில் பலத்த காயமடைந்தார்.  அருகிலிருந்தவர்கள் சிறுவன் கார்முகிலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவலறிந்த மங்களமேடு காவல்துறையினர் வாகனத்தின் அடியில் சிக்கிய காரை அகற்றி, காரினுள் உயிரிழந்து கிடந்த 4 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.