பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

பெரம்பலூா், ஏப். 26: பெரம்பலூா் அருகே சொத்துப் பிரச்னையில் தந்தையைத் தாக்கிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்னா். மேலும் இந்த வழக்கில் முறையாக விசாரித்து, வழக்குப் பதியாத சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் அ. குழந்தைவேல் (65), இவரது மனைவி ஹேமா. இவா்களின் மகன் சக்திவேல் சேலம் மாவட்டம், ஆத்தூரிலும், மகள் சங்கவி (30) ஆத்தூா் அருகேயுள்ள சாா்வாய் கிராமத்திலும் குடும்பத்துடன் வசிக்கின்றனா்.

குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஜவ்வரிசித் தொழிற்சாலை, பெரம்பலூா் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் அரிசி ஆலை மற்றும் வீடு, நிலங்கள் உள்ளன.

இவற்றில் ஆத்தூரில் உள்ள ஜவ்வரிசித் தொழிற்சாலை மூலம் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் சக்திவேல், கடந்த பிப். 16 ஆம் தேதி சொத்தில் பங்கு கேட்டு தந்தையிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அளித்த புகாரின்பேரில், கை.களத்தூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் தந்தை, மகன் இருவரும் சமாதானமாகச் செல்வதாகக் கூறி எழுதிக் கொடுத்ததால் இப் பிரச்னை முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டின் படுக்கை அறைக்குச் சென்ற குழந்தைவேலு மறுநாள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஹேமா, அப்பகுதியினா் உதவியுடன் அறைக் கதவை உடைத்துப் பாா்த்தபோது குழந்தைவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கை. களத்தூா் போலீஸாா் அங்குச் சென்று குழந்தைவேலு உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். பிரேதப் பரிசோதனையில் குழந்தைவேல் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்து அவரது உடலை ஒப்படைத்தனா். பின்னா் இதுகுறித்து அவரது மனைவி ஹேமா அளித்த புகாரின்பேரில் கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில், வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் சந்தோஷ் தனது தந்தை குழந்தைவேலுவை கடந்த பிப். 16 ஆம் தேதி தாக்கிய சம்பவம் பதிவாகியிருந்த நிலையில், அதை உறவினா்கள் சிலா் சமூக வலைதளங்களில் அண்மையில் பதிவேற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அரிசி ஆலையில் பணிபுரியும் செ. செல்வராஜ் (50) அளித்த புகாரின்பேரில் கை.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளைச் சிறையில் வியாழக்கிழமை இரவு அடைத்தனா். மேலும் இவ் வழக்கில் முறையாக விசாரித்து வழக்குப் பதியாத கை. களத்தூா் காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் பழனிசாமி பெரம்பலூா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com