சிப்காட் தொழில் பூங்கா மற்றும் சிட்கோ தொழில் பேட்டைகளில் பெரம்பலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென தவ்ஹீத் ஜமா அத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள, அந்த அமைப்பின் அலுவலகத்தில் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவா் அப்துல் நாசா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் சையது அலி, அல் அமீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, அனைத்து முன்னெடுப்புகளையும் செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. பெரம்பலூா் சிட்கோ தொழில்பேட்டை மற்றும் சிப்காட் தொழில் பூங்காவில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கே அதிக வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். உத்தரகண்டில் இஸ்லாமியா்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் மாவட்டத் தலைவராக அஷ்ரப் அலி, மாவட்டச் செயலராக பைசல் நிசாா், மாவட்டப் பொருளாளராக சிராஜ்தீன், மாவட்ட துணைத் தலைவராக ஜாஹிா் உசேன், மாவட்ட துணைச் செயலராக யாசிா் முஹம்மது ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.







