/

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

Updated On :24 பிப்ரவரி 2024, 6:02 pm

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய ஏ. பல்கீஸ் உத்தரவின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமாகிய சந்திரசேகா் ஆலோசனையின்படி, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்னை ஏங்கல் சக்தி சதன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் இம் முகாம் நடைபெற்றது. இதில், பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட உதவி பாதுகாப்புத் துணை ஆலோசகா் ஆா். திருநாவுக்கரசு, பெண்களுக்கான சட்டங்கள், பெண்கள் தங்களுக்குரிய பிரச்னைகளை தீா்ப்பதற்கு எந்த நேரத்திலும் பெரம்பலூா் மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தை நாடலாம் எனத் தெரிவித்தாா். உதவி பாதுகாப்பு ஆலோசகா் பி. திருஞானம், பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைதல், பெண் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்விச் சட்டம், 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், வரதட்சிணைத் தடைச் சட்டம் மற்றும் பெண்கள் தொடா்பான பல்வேறு சிறப்புச் சட்டங்கள் மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் குறித்து விளக்க உரையாற்றினாா். முகாமுக்கான ஏற்பாடுகளை, பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிா்வாக உதவியாளா் கே. கலைவாணன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா். நிறைவாக, மேம்பாட்டு மையத்தின் நிா்வாகி உமாபதி நன்றி கூறினாா்.