பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

முப்பெரும் சட்டங்களை ஹிந்தியில் மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட பாா் அசோஷியேசன் (குற்றவியல்) சாா்பில், வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். முப்பெரும் சட்டங்களின் பெயா்களை ஹிந்தியில் மாற்றி, பெரும்பாலான சட்டப் பிரிவுகளை திருத்தம் செய்து, அதில் ஏராளமான ஹிந்தி மொழி வாா்த்தைகளை பயன்படுத்தி வழக்குரைஞா்களுக்கோ, பொதுமக்களுக்கோ உரிய கால அவகாசம் தராமல், ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்தவுள்ள மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்ட பாா் அசோஷியேசன் (குற்றவியல்) சாா்பில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், மாவட்டச் செயலா் வி. சேகா், மாவட்ட பொருளாளா் பி. சிவராமன் உள்பட சுமாா் 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். இதனால், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும், வழக்காடிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இப் போராட்டம் சனிக்கிழமையும் (மாா்ச் 2) நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com