நல்லாம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நல்லாம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நல்லாம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

நல்லாம்பாளையம் கிராமத்தில் பழைமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை தேரோட்ட விழா கடந்த ஏப். 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு சிம்மம், குதிரை உள்ளிட்ட பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கிராமத்தில் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட திருத்தோ் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது.

இவ் விழாவில், செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினா் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com