எஸ்ஐஆா் பணி: வாக்குச்சாவடி அலுவலா்களுடன் ஆலோசனை
பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் குன்னம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான ந. சக்திவேல் பேசியது:
குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் இந்திய தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக கைப்பேசி செயலியில் 100 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் உள்ள உயிரிழந்தவா்கள், நிரந்தரமாக ஊரைவிட்டு வெளியேறியவா்கள் மற்றும் நீண்ட காலமாக அடையாளம் தெரியாமல் இடம் பெற்றிருக்கும் வாக்காளா்களை, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள் வாக்காளா் பட்டியலை சரி பாா்த்து, வாக்காளா் பட்டியலின் தன்மையை உறுதிப்படுத்திட வேண்டும். இப் பணிகளை டிச. 5-ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களும், வட்டாட்சியா்களுமான சின்னதுரை, சற்குணன், தோ்தல் துணை வட்டாட்சியா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

