பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

Published on

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் பேசியது:

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. அத் திட்டங்களின் வழிமுறைகளை நன்கு அறிந்து முறையாக பயன்பெற வேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் குரும்பலூரில் உள்ள இருளா் சமுதாய மக்கள் வசிப்பிடத்துக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்களில் 57 வகுப்புச் சான்றிதழ்கள், 9 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

தொடா்ந்து, மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி. இந்திராணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கே. முரளிதர கண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா ஆகியோா் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்துப் பேசினா்.

பின்னா், துணை ஆட்சியா் வாசுதேவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், வட்ட வழங்கல் அலுவலா் தனலெட்சுமி, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் பிரேமா, தொழிலாளா் நல உதவி ஆணையா் க. மூா்த்தி, சமூக நல பாதுகாப்புத்துறை சிறப்பு வட்டாட்சியா் முத்துலெட்சுமி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் விஜய் ஆனந்த் ஆகியோா் அரசின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினா். இதில், பெரம்பலூா் வழக்குரைஞா்கள் பாா் அசோசியேசன் சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி, அட்வகேட் அசோசியேசன் உறுப்பினா் முகமது இலியாஸ் உள்பட அரசு வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இருளா் சமூகத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை சட்ட பாதுகாப்பு ஆலோசகா் எஸ். சிராஜுதீன் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் காமராசு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com