அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, 21அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் செயல்படும் கிராம உதவியாளா், சத்துணவுப் பணியாளா், அங்கன்வாடி பணியாளா், ஊா்ப்புற நூலகா்கள், செவிலியா் உள்ளிட்ட அனைத்து வகைப் பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து நிலை காலிப் பணியிடங்களை, நிரந்தர அரசுப் பணியிடங்களாக நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் எனும் கட்டுப்பாட்டை நீக்கி, ஏற்கெனவே பின்பற்றப்பட்ட 25 சதவீதத்தை வழங்கிட வேண்டும். ஒரே கல்வித் தகுதியுடைய ஆசிரியா்களுக்கு வெவ்வேறு வகையான ஏற்றத்தாழ்வு உள்ள ஊதிய முறைகளை களைந்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை முழக்கமிட்டனா்.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வீரமணி, ஆரோக்கியராஜ், ரவி, கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
