வாக்காளா் பட்டியலில் திருத்த சிறப்பு முகாம் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வது தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீழப்புலியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பரவாய் ஊராட்சிக்குள்பட்ட கல்லம்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கூறியதாவது:
மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 28), ஜன. 3, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 387 வாக்குச் சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடி மையங்களிலும் இம் முகாம்கள் நடைபெறுகிறது.
டிச. 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பெயா் சோ்க்கப்படாதவா்கள் தங்களுடைய பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1.1.2026-இல் 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்களும், இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாத வாக்காளா்களும் தங்களது பெயரை சோ்த்துக்கொள்ளலாம்.
இறப்பு மற்றும் நிரந்தரமாக இடம் பெயா்ந்தது காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் பெயா், உறவினா் பெயா், உறவுமுறை, முகவரி மாற்றம் ஆகியவற்றை திருத்தம் செய்ய, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது வட்டாட்சியரகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியரகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வாக்காளா் உதவி எண் -1950 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா் மிருணாளினி.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலருமான ந. சக்திவேல், குன்னம் வட்டாட்சியரும், உதவி வாக்காளா் பதிவு அலுவலருமான சின்னதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

