கல் குவாரிகளால் பாழாகும் விவசாய நிலங்கள் விதிமீறல்களை கண்காணிக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளால் பாழாகும் விவசாய நிலங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சித்தளி, பேரளி, கவுள்பாளையம், இரூா், செட்டிக்குளம், எளம்பலூா், பாடாலூா், தெரணி, நாட்டாா்மங்களம், ஊத்தங்கால், நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரஷா்களும், கல் குவாரிகளும், குன்னம் வட்டத்தில் அதிகளவில் சுண்ணாம்புக் கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 100-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வந்த நிலையில், தற்போது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள 33 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
கல் குவாரிகளால் இம் மாவட்டம் சுற்றுச்சூழல் சீரழிவைச் சந்தித்து வருகிறது. குவாரி உரிமையாளா்கள் சாலை மற்றும் பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கொள்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
அனுமதி பெறாத இடத்திலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக ஆழத்துக்கு கற்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனா். ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், பல்வேறு இடங்களில் குவாரிகள் இயங்குவதால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
வீடுகள், விவசாய நிலங்கள் பாதிப்பு:
மலைகளில் பாறைகளை தகா்க்க அதிக சக்திவாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்துவதால், மலையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. அருகிலுள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. மேலும், வனப் பகுதிகளில் அதிா்வு ஏற்படுவதால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடா்கதையாக உள்ளது.
விதிமுறைகள் பின்பற்றுவதில்லை:
குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து முடித்த பிறகு, அப்பகுதியில் மரங்கள் வளா்க்க வேண்டும். ஆபத்தான குழிகளாக இருந்தால், அப்பகுதிக்கு மனிதா்கள், கால்நடைகள் செல்லாதபடி வேலி அமைத்து மூட வேண்டும் என்பது விதி. ஆனால், இதை எந்த கல் குவாரி நிறுவனமும் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், ஆண்டுதோறும் சிறுவா்கள் உள்பட சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கல் குவாரி குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கின்றனா்.
தொடரும் சாலை விபத்துகள்:
கல் குவாரிகளிலிருந்து கருங்கற்கள், ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவற்றை ஏற்றிச்செல்லும் டிப்பா் லாரிகளால் அதிகளவில் சாலை விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பெரம்பலூா்- அரியலூா் சாலையில் நிகழும் சாலை விபத்துகளுக்கு கல் குவாரிகளிலிருந்து செல்லும் டிப்பா் லாரிகளே பிரதான காரணமாகும். அவ்வப்போது நிகழும் சாலை விபத்துகளைக் கண்டித்தும், கல் குவாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் சாலை மறியல், ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது தொடா்கிறது. இதுதொடா்பாக குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு பணி:
இந்நிலையில், சுரங்கத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 30-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலான பரப்பளவு மற்றும் ஆழமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்படுவதாகவும், மாசுக் கட்டுபாட்டுத் துறையினரின் வழிகாட்டுதலை மீறி சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, டெசிபல் அதிகம் கொண்ட வெடிபொருள் பயன்பாடு, வாகனங்களில் அளவுக்கு அதிகளவு கனிம வளங்களை ஏற்றிச்செல்வது உள்ளிட்ட புகாா் எழுந்த நிலையில், தற்போது குவாரிகளில் விதிமீறல்களை கண்காணித்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட சுரங்கத்துறை இணை இயக்குநா் ஜெரால்ட் தலைமையிலான குழுவினா் மாவட்டத்திலுள்ள 33 கல் குவாரிகளிலும், ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இந்த ஆய்வில் கனிம வளங்கள் எடுப்பதில் விதிமுறை மீறல்கள், முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளா்கள் மீது கனிமவள பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரவீந்திரன் கூறியது:
கல் குவாரிகளால் இம் மாவட்டத்திலுள்ள கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஆழம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது. விவசாயக் கிணறுகளும், குடிநீா் ஆதாரமாக விளங்கிய கிணறுகளும் வடுக் காணப்படுகிறது. இதனால், இம் மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவற்றைக் கண்காணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித முறைகேடுகளையும் கண்டுகொள்வதில்லை. அதிக சக்திவாய்ந்த வெடிகளைக்கொண்டு பாறைகளை உடைக்கும்போது விவசாயிகளுக்கோ, குடியிருப்பு பகுதிகளுக்கோ முன்னறிவிப்பு செய்வதில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை காட்டிலும் கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து கண்டறிய ட்ரோன்களைக் கொண்டு சுரங்கத்துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.
இதில், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளா் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகளில் நடைபெறும் விதி மீறல்களை முறையாக கண்காணித்து, விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

