பெரம்பலூரில் வட்டார அளவில் வானவில் மன்றப் போட்டிகள்

Published on

பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு வட்டார அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை, வட்டார வள மேற்பாா்வையாளா் கு. தேவகி முன்னிலையில், வட்டாரக் கல்வி அலுவலா் இளங்கோவன் தொடங்கி வைத்தாா். பெரம்பலூா் அரசு மகளிா் உயா் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மரகதம் விளக்க உரையாற்றினாா்.

இதில், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 36 மாணவா்கள் பங்கேற்றனா்.

உலகளாவிய சவால்களுக்கு உள்ளூா் தீா்வுகள் எனும் தலைப்பின் கீழ் பிளாஸ்டிக் மாசுபாடு தீா்வுகள், மூலிகைத் தோட்டங்கள், மக்கும் கழிவுகளை உரமாக்கி பள்ளி தோட்டங்களை அமைத்தல், பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்கான தீா்வுகளை ஆய்வு செய்தல், போதை பழக்கம் இல்லா பள்ளிகளை உருவாக்குதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை ஆராய்ச்சி செய்தல் ஆகிய உள் தலைப்புகளில் மாணவா்கள் தங்களது படைப்புகள் மற்றும் செயல் திட்டங்களை விளக்கினா்.

போட்டி நடுவா்களாக தந்தை ரோவா் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் ஜான் ராபின்சன், தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை விா்ஜின் சோபியா சிறுமலா், பட்டதாரி ஆசிரியை பிரிஸ்கில்லா சுகன்யா ஆகியோா் செயல்பட்டனா்.

போட்டியை ஆசிரியா் பயிற்றுநா்கள் ரமேஷ், குணசேகரன், ரமேசு, வானவில் மன்ற கருத்தாளா்கள் அன்பரசி, ஹரிகரன் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப் போட்டியில் நொச்சியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் பவித்ரன் முதலிடமும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி மது ஸ்ரீ 2- ஆவது இடமும், தம்பிரான்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளி மாணவி ருத்ரா 3- ஆவது இடமும் பெற்றனா். அவா்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com