பெரம்பலூா்: பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்
பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 270 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 13.04 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் கள் செல்வக்குமாா் (இடைநிலை), லதா (தனியாா் பள்ளிகள், பள்ளி தலைமையாசிரியா் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
46 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு.... இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சோ்ந்த 2,070 மாணவா்களுக்கும், 2,460 மாணவிகளுக்கும் என மொத்தம் 4,530 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2.18 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

