பெரம்பலூரில் உள்ள தேநீரகத்தில் அண்மையில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
பெரம்பலூா்- வடக்குமாதவிச் சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்த சப்பாணி மகன் அருணாச்சலம் (40). பெரம்பலூா் நகர காவல் நிலையம் எதிரே தேநீரகம் வைத்துள்ளாா். இந்தக் கடையில் கடந்த 11-ஆம் தேதி மாலை எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த தொழிலாளா்கள் மற்றும் தேநீரகத்தில் நின்றிருந்த வாடிக்கையாளா்கள், சாலையோரம் நடந்துசென்றவா்கள், பள்ளி மாணவி உள்பட மொத்தம் 16 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்களில் 5 போ் பெரம்பலூா் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 11 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில், பொம்மனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (42) கடந்த 13-ஆம் தேதியும், தேநீரகத்தில் மாஸ்டராக பணிபுரிந்த சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ் (32), பெரம்பலூா் ரெங்கா நகரைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் சகாதேவன் (54)ஆகியோா் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனா்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேநீரக ஊழியரான கொட்டரை கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (50) திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



