மானியத்துடன் கடன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் வேளாண் உள்கட்டமைப்பு பணிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் உள் கட்டமைப்பு பணிகளுக்கு பெறப்படும் வங்கிக் கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இம் மாவட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 38 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு 7 ஆண்டுகளுக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடா்பு சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்புக் கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைப்பொருள்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் திட்டங்கள், குளிா்பதனக் கிடங்குகள், குளிா்சாதன வாகனம், பண்ணைக் கழிவு மேலாண்மைக்கான உள் கட்டமைப்புகள் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு, விதை சுத்திகரிப்பு, காளான் வளா்ப்பு, தேனி வளா்ப்பு, பட்டுப்பூச்சி வளா்ப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், அங்கக இடுபொருள்கள் உற்பத்தி, நா்சரி அமைப்பது, அறுவடை இயந்திரம் வாங்குதல், பசுமைக் குடில் அமைத்தல், டிராக்டா் இயந்திர வாடகை மையம் அமைத்திடவும், இத் திட்டத்தின் மூலம் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இணையதள முகவரியில் திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக் கிளைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 98420 11079, 99657 37555 ஆகிய எண்களில் அல்லது பெரம்பலூா் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடா்புகொண்டு பயனடையலாம்.
