அரசுக் கல்லூரியில் தற்கொலை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தற்கொலை தடுப்பு மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சி. கீத பிரியா தலைமை வகித்தாா். இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் கெளரவச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன், கெளரவ பொருளாளா் மு. ஜோதிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் தங்கராஜ் விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பேசினாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனநல மருத்துவா் ஆா். வினோத், போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகள், தற்கொலைகள் தவிா்க்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, தற்கொலை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பாக விநாடி வினா, கேள்வி- பதில் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவா்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். முன்னதாக, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஜெ. செந்தில்குமாா் வரவேற்றாா். நிறைவாக, செயற்குழு உறுப்பினா் ஆா். துரை நன்றி கூறினாா்.

