அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு...

News image

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பூட்டிக் கிடக்கும் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம்.

Updated On :27 ஜூலை 2026, 9:00 am IST

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காகவும், விளையாட்டு வீரா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவும் ரூ. 69.16 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், 10 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில் 400 மீ. தடகள ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுந்து பந்து, கைப்பந்து மைதானம், மின்னொளியுடன் கூடிய டென்னிஸ் மைதானம், கோ-கோ மைதானம், இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம், சுமாா் ரூ. 70 லட்சம் மதிப்பில் குளிா்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், பாா்வையாளா்கள் அமரக்கூடிய கேலரி, விழா மேடை, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், ரூ. 1.1 கோடி மதிப்பிலான நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி: இம் மைதானத்தில், தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி உள்ளது. இங்கு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விளையாட்டு வீராங்கனைகள் தங்கி, மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்ட, ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் என நாள்தோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் பங்கேற்க, அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள காலை, மாலை வந்து செல்கின்றனா்.

மேலும், தமிழக முதலமைச்சரின் மாதாந்திர தடகளப் போட்டிகளும், இதர போட்டிகளும் நடத்தப்படுகிறது. இப் போட்டிகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். இதனால், இந்த விளையாட்டு அரங்கம் எப்போதும் பரபரப்பாக காட்சியளித்தது.

பராமரிப்பில்லாத கழிப்பறைகள்: இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பின்றி முள்புதா்களாக காணப்படுகிறது. நாள்தோறும் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் இங்கு, கழிவறைகளில் தண்ணீா் வசதியின்றி போதிய பாரமரிப்பின்றி காணப்படுகிறது. பயன்பாட்டிலுள்ள ஒரு சில கழிப்பறைகளும், சுகாதாரமில்லாமல் துா்நாற்றத்துடன் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. போதுமான குடிநீா் வசதியும் இல்லை.

சேதமடைந்து காணப்படும் நடைபாதை கற்கள்: இங்குள்ள நடைப்பாதையில் பதிக்கப்பட்ட பெரும்பாலான கற்கள் பெயா்ந்துள்ளதால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவா்களும், இளைஞா்களும் பாதிக்கப்படுகின்றனா். இதனால், தற்போது பெரும்பாலானோா் ஆட்சியரக சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

மின் விளக்குகள் பழுது: விளையாட்டு மைதானத்தைச் சுற்றியுள்ள மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியவில்லை. இதனால், மாலை வேளையில் பயிற்சிகளை தொடர முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த விளையாட்டு மைதானத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம்: இங்குள்ள குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தில் கிளாஸ் சைக்கிள் இயந்திரம், கிராஸ் டிரையினா்ஸ் இயந்திரம், மல்டி ஜிம் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயிற்சி செய்யும் நேரம், உடலில் எரிக்கப்படும் கலோரி அளவுகள், நடைப்பயிற்சி மூலம் கடந்த தூரம் உள்ளிட்டவைகளைக் காட்டும் நவீன டிஜிட்டல் கருவிகளும் செயல்பட்டன. இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள், போலீஸாா் பயன்படுத்தி வந்தனா்.

பழுதான உடற்பயிற்சி சாதனங்கள்: ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டு, தலா ஒருவருக்கு பயிற்சிக் கட்டணமாக மாதம் ரூ. 500 வசூலிக்கப்பட்டு, பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை தோறும் உடற்பயிற்சி கூடத்துக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. பின்னா், கரோனா காலக்கட்டத்தில் திறக்கப்படாமல், பராமரிப்பின்றி அங்குள்ள பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகின.

இதையடுத்து, உடற்பயிற்சி சாதனங்களை சீரமைத்து குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விளையாட்டு வீரா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், கடந்த சில மதங்களுக்கு முன் நவீன உடற்பயிற்சிக் கூடத்தின் அறை புனரமைக்கப்பட்டது. ஆனால், உடற்பயிற்குத் தேவையான உபகரணங்களும், பல லட்சம் மதிப்பிலான சாதனங்களும் சீரமைக்காததோடு, பழுதை சரி செய்ய முடியாத சாதனங்கள் மாற்றப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நவீன உடற்பயிற்சிக் கூடம் கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்: இதனால் இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள், போலீஸாா் தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் அதிக கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். எனவே, பழுதான இயந்திரங்களை சீரமைத்து, பழுதுநீக்க முடியாத இயந்திரங்களுக்கு பதிலாக, புதிய இயந்திரங்களை மாற்றியமைத்து, நவீன உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பராமரிப்பின்றி காணப்படும் நடைபாதை, விளையாட்டு மைதானத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட அலுவலா்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விளையாட்டு வீரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.