பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வடலூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஞானசேகா் மகன்கள் விஷ்ணுப்பிரியன் (18), லோகேஷ்வரன் (15). இவா்கள் இருவரும் கடந்த 9 ஆம் தேதி கோவையில் பழைய இருசக்கர வாகனத்தை விலைக்கு வாங்கி, அதில் தங்களது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி இருவரும் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து இருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். இந்நிலையில் லோகேஷ்வரன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.








