இயல்பான வாழ்க்கைக்கு உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்றார் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.எச். சலீம்.
புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பரிசோதனை முகாம், உணவு கண்காட்சியைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
உலகளவில் 38.7 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 7.6 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை முறையாகச் செய்வதும், உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவது மட்டும்தான் ஒரு சர்க்கரை நோயாளியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம். சர்க்கரை நோயை அலட்சியம் செய்யாமல் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் மற்றவர்களைப் போல் இயல்பான வாழ்க்கையை இனிதாக வாழ முடியும் என்றார்.
நிகழ்வுக்கு, மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் இணை இயக்குநர் எஸ்.சையது மொய்தீன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் க.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக நீரிழிவு நோய்க் கல்வியாளர், எழுத்தாளர் செருவை நாகராசன், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் கரு.இராமநாதன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். இதை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம், உணவுக் கண்காட்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வுக் கையேடு வழங்கப்பட்டது. கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மிட் டவுன் ரோட்டரி சங்கச் செயலர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மேலாளர் எஸ்.சுரேஷ், உணவியல் நிபுணர் மகாலெட்சுமியும், கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி, விரிவுரையாளர் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.