அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: ஸ்டாலின்
கடந்த தேர்தல்களில் அதிமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.


கடந்த தேர்தல்களில் அதிமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஊனையூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற மக்கள் சந்திப்பு- குறைகேட்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை முதலில் தொடங்கியதே முதல்வராக இருந்த கருணாநிதிதான். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் நல்ல குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டபோது, நான் உள்ளாட்சித் துறை அமைச்சர். என்னை ஜப்பானுக்கு அனுப்பி நிதி பெற்று வரச் சொல்லி, அந்த மாவட்டங்களின் மக்களுக்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, தண்ணீரில்லாத மாவட்டம் என்றழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்துக்கென ரூ. 616 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இப்போதுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர், முதல்வரைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்ப வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் இருக்கிறார். ஊழல் செய்வோர் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ்நாட்டில் 10 லட்சம் ஆசிரியர் பயிற்சி பெற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துக் காத்திருக்கிறார்கள். அதேபோல, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 7 ஆண்டுகளாக வேலையின்றி இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கவலைகள் அனைத்தும் போக்கப்படும்.கரோனா காலத்திலும் ஊழல் செய்த அமைச்சர்தான் உங்கள் மாவட்டத்தின் அமைச்சர் சி. விஜயபாஸ்கர். கரோனா மரணத்திலும் பொய் சொன்னவர் அவர். குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேபோல, ஆர்கே நகர் தேர்தல் முறைகேடு மற்றும் வருமான வரித்துறை குற்றச்சாட்டுகளுக்கும் சிபிஐ விசாரணை கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பாழ்படுத்தியிருக்கிறார்கள். வெற்றி நடை போடும் தமிழகம் என்கிறார் முதல்வர். உண்மையில் அது வெத்து நடை போடும் தமிழகமாகத்தான் இருக்கிறது. வளமான தமிழகம் என்கிறார் முதல்வர். உண்மையில் அதிமுகவினருக்கு வளமான தமிழகம்தான்.
மக்களுக்கு தாழ்ந்த தமிழகமாகத்தான் இருக்கிறது.
மண் அள்ளுவதைப் போல பணத்தை அள்ளுகிறார்கள். பெரிய திட்டங்களைத்தான் நிறைவேற்றவில்லை என்றால் மக்களுக்குத் தேவையான அவசியமான திட்டங்களையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. நான் மக்களுக்கு காது குத்துவதாக முதல்வர் பழனிசாமி கூறிவருகிறார். அந்த அவசியம் எனக்கு இல்லை. அதிமுக அரசுதான் கோடிக்கணக்கான மக்களுக்கு காது குத்துகிறது. 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றை நிறைவேற்றியுள்ளதா?
இரண்டாவது விவசாயப் புரட்சி வரும் என்றார்கள், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு உயர்த்துவதாகச் சொன்னார்கள், விவசாயக் கருவிகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்கள், கரும்பைப் போல மற்ற பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படும் என்றார்கள் இவற்றையெல்லாம் செய்தார்களா? 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அதிமுக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றியுள்ளதா?
குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு செல்லிடப்பேசி வழங்கப்படும் என்றார்கள், கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள், அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும் என்றார்கள், ஒரு லிட்டர் பால் ரூ. 25-க்கு வழங்கப்படும் என்றார்கள், பொது இடங்களில் இலவச இணைய இணைப்பு வழங்கப்படும் என்றார்கள். இவற்றையெல்லாம் செய்தார்களா? தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைக்கிறார் முதல்வர் பழனிசாமி. அவரைப் போல ஏமாற்றிப் பிழைக்க எனக்குத் தெரியாது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தொழில்கள் உருவாக்கப்படும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இது உறுதி என்றார் ஸ்டாலின். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சாதனையாளர்களையும் ஸ்டாலின் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.
முன்னதாக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ரகுபதி எம்எல்ஏ வரவேற்றார். வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சிவ. வீ. மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் கவிதைப்பித்தன், உதயம் சண்முகம், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் த. சந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ். ஜெயராமன், புதுக்கோட்டை நகர திமுக செயலர் க. நைனாமுகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள், திமுகவினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...