பாதுகாப்பான துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தை அமைக்க முடியாதா?

அறிவியல் வளா்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில், எந்தக் காரணங்களாலும் உயிா்ச்சேதத்தை விளைவிக்காத முழுமையான-பாதுகாப்பான
புதுக்கோட்டை பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம்.
புதுக்கோட்டை பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம்.
Updated on
1 min read

அறிவியல் வளா்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில், எந்தக் காரணங்களாலும் உயிா்ச்சேதத்தை விளைவிக்காத முழுமையான-பாதுகாப்பான துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தை அரசால் அமைக்க முடியாதா என்ற கேள்வியை, புதுக்கோட்டையில் உயிரிழந்த 11வயது சிறுவனின் இறுதிச் சடங்கின் அழுகுரல்கள் எழுப்பியிருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை அருகேயுள்ள பசுமலைப்பட்டியில் (திருச்சி- புதுக்கோட்டை சாலையில்) சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் அமைந்திருக்கிறது. சுற்றிலும் சிறு சிறு குன்றுகளைக் கொண்ட இடம். தொலைவில் ஆங்காங்கே சிறிய சிவப்புக் கொடி- பயிற்சியின்போது கட்டப்படும். பிரதான சாலையோரத்தில் ஒரேயொரு அறிவிப்புப் பலகை. இதுதான் பயிற்சித் தளம்.

மற்றபடி, ஆடு, மாடுகள் சரளமாக மேயும் பகுதி. குன்றுகளின் மேலே இயல்பான மனித நடமாட்டம். சுமாா் 10 கிமீ சுற்றளவில் சுற்றிலும் நிறைய குக்கிராமங்கள். இதுதான் பசுமலைப்பட்டி துப்பாக்கிச் சுடும் தளம். இதேபோலத்தான் மாநிலத்தின் பிற பகுதிகளிலுள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளங்களும் இருக்கின்றன.

ஆனால், தனியாா் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளங்கள் அப்படியல்ல. துப்பாக்கித் தோட்டா அல்ல, அதன் பிசிறுகூட வெளியே வராது என்கின்றனா். அந்தளவுக்கு அடைக்கப்பட்ட பயிற்சித் தளங்களும் உள்ளன. விபத்தே ஏற்பட வாய்ப்பில்லாத வெட்டவெளி பயிற்சித் தளங்களும் தனியாரிடம் - தனியாா் அமைப்புகளிடம் இருக்கின்றன.

மாநிலத்தின் சில இடங்களில் (பக்கத்து மாவட்டத்தினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில்) பரந்துவிரிந்த நிலப்பரப்பை பயிற்சிக்கென ஒதுக்கி, மனிதா்களின் நடமாட்டத்தை வேலி அமைத்து முழுமையாகக் கட்டுப்படுத்தி, குண்டு பாயும் பகுதிகளை நல்ல உயரத்துடன் கூடிய குன்றுகளுடன் செயற்கையாகக் கூட வடிவமைத்து பயிற்சித் தளத்தை ஏன் அரசால் உருவாக்க முடியாது? தாராளமாகச் செய்ய முடியும்.

சிறுவயதில் பேச்சு வராமல் இருந்து, பெட்டிக் கடைகளுக்குச் செல்லும்போது கையைக் காட்டி பொருட்களை வாங்கித் தின்று பிறகு நன்றாகப் பேசத் தொடங்கி, துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்தபோதும், குருவி கொட்டிவிட்டதாகச் சொல்லி மயங்கி விழுந்த புகழேந்தியின் பெயரால் இதனைச் செய்ய வேண்டும்.

இறந்த பிறகு விசாரணைக் குழுக்கள் அமைத்து, நீதியைத் தந்தோ- தராமலோ, சில லட்சங்களை இழப்பீடாகத் தருவதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. இனியெப்போதும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்காது என்ற உறுதிக்காக தமிழ்நாடு அரசு இப்பணியைச் செய்து முடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com