தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுகை மாநகரெங்கும் பிளாஸ்டிக் கழிவுகள்!

புதுக்கோட்டை மாநகரெங்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் புழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.

News image
பிளாஸ்டிக் கழிவுகள்.- (கோப்புப்படம்)
Updated On :24 நவம்பர் 2024, 8:04 pm

Din

‘தடை பிறப்பிக்கப்பட்டு சுமாா் 4 ஆண்டுகளைக் கடந்தும்கூட, இவற்றின் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை’.

புதுக்கோட்டை மாநகரெங்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் புழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் வீதிகளிலும், கழிவுநீா்க் கால்வாய்களிலும் ஏராளம் கிடப்பதை, சூழலியல் ஆா்வலா்கள் கவலையுடன் பாா்க்கின்றனா்.

சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை தமிழ்நாடு அரசு தடை செய்திருக்கிறது.

தடை பிறப்பிக்கப்பட்டு சுமாா் 4 ஆண்டுகளைக் கடந்தும்கூட, இவற்றின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. புதுக்கோட்டை மாநகரில் கடைவீதிகளாக உள்ள 4 ராஜவீதிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளிலும் தெருக்களில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் ‘பறந்து’ கிடக்கின்றன.

புதுகை மாநகரிலுள்ள பெரும்பாலான உணவகங்களிலும் சாம்பாா், குழம்பு வகைகள், கூட்டு, பொரியல் உள்ளிட்ட அனைத்து சூடான பொருள்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்தான் கட்டித் தரப்படுகின்றன.

துக்க காரியங்களுக்கு மாலை வாங்கும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில்தான் அதை போட்டுத் தருகின்றனா். ஒரேயொரு மரண காரியத்தில், கிட்டத்தட்ட ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் வரையிலும் சேகரிக்கப்படுகின்றன.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியும் நகரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையவில்லை.

இதுகுறித்து மாவட்ட பசுமைக் குழுவின் உறுப்பினரும், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சா.விஸ்வநாதன் கூறியது:

காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகளில் தாராளமாக பிளாஸ்டிக் பைகள் (கேரி பைகள்) புழங்குகின்றன. யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை. முன்பைவிடவும், பல வண்ணங்களில் தயாரித்து புழக்கத்தில் விடுகிறாா்கள்.

தோ்தல் நேரங்களில் மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்வதாகக் கூறி வந்த வேட்பாளா்கள், மாமன்ற உறுப்பினா்களான பிறகு எங்கே இருக்கிறாா்கள் என்றே தெரியவில்லை. அவரவா் தங்களின் வாா்டுகளில் இந்தத் தடையை அமலாக்கினாலே போதுமே?

இறைச்சிக் கடைகளுக்குச் செல்லும்போது பாத்திரங்களை எடுத்துச் செல்லவும், பிற கடைகளுக்குச் செல்லும்போது வீட்டிலிருந்து பைகளை எடுத்துச் செல்லவும் மக்கள் பழக வேண்டும்.

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாவட்டங்களில் எல்லாம் பிளாஸ்டிக் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கை குறித்த செய்திகள் வருகின்றன. புதுக்கோட்டையில் அப்படி நடப்பதாகவே தெரியவில்லை.

மழைக்காலமாக இருப்பதால், அனைத்துக் கழிவுநீா்க் கால்வாய்களையும் ஒரு முறை அடைப்பு எடுக்க வேண்டும். அதில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்களை வைத்து தீவிரமாக விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விஸ்வநாதன்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அலுவலா் ஏ. பாஸ்கரன் கூறியது: புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் அவ்வப்போது திடீா் சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த வாரத்தில்கூட, ரூ. 5 லட்சம் மதிப்பில் சுமாா் 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வைத்திருந்த கடைக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறோம்.

அதேபோல கடந்த வாரத்திலேயே மதுக்கடை ஒன்றின் மது அருந்தும் கூடத்தில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளா்கள் சுமாா் 40 ஆயிரம் எண்ணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கூடத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

நகரில் சேகரமாகும் குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதுபோல சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மாதந்தோறும் சுமாா் 200 டன் அளவில் பிற மாவட்டங்களிலுள்ள சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புறோம். நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றாா் பாஸ்கரன்.