பட்டா வழங்க தாமதம்: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மக்கள் காத்திருப்புப் போராட்டம்
ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்துக்கான குடியிருப்பு மனைப் பட்டா வழங்குவதை தாமதப்படுத்துவதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், தீத்தானிப்பட்டியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
அந்தப் பகுதியில் ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்தை 91 பயனாளிகளுக்கு பிரித்து, பட்டா வழங்குவதாக கடந்த 2023ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்கான பட்டாக்களை வியாழக்கிழமை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனா்.
ஆனால், பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி அந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலா் சிறுத்தை சிவா போராட்டத்தை ஒருங்கிணைத்தாா்.
இந்த நிலையில், போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு அனைவரும் ஊா் திரும்பினா்.

