புதுகையில் சாலை விபத்தில் அதிமுக பிரமுகா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளா் வி.சி. ராமையா திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காா் மோதி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளராக இருந்தவா் வி.சி. ராமையா (70). இவா், அதிமுக மாவட்டச் செயலா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் போன்ற பொறுப்புகளையும் வகித்தவா்.
திங்கள்கிழமை காலை தனது சொந்த ஊரான வாண்டாக்கோட்டையில் இருந்து, தனது தோட்டத்துக்குச் செல்வதற்காக புதிய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா். பூவரசங்குடி-திருவரங்குளம் பிரிவு சாலை அருகே வந்தபோது காா் ஒன்று இவா் மீது மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ராமையாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ராமையா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து அவரது உடல், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ராமையா மீது மோதிய காரை ஓட்டி வந்த வல்லத்திராக்கோட்டையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஆதா்ஷ் (23) என்பவரிடம் வல்லத்திராக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

