புதுகையில் பிஎஸ்என்எல் வயா்களை தோண்டித் திருடும் 6 போ் கைது
புதுக்கோட்டை நகரில் பிஎஸ்என்எல் காப்பா் வயா்களைத் தோண்டித் திருடும் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மேலராஜவீதியிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தரையில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் வயா்களை பிஎஸ்என்எல் பணியாளா்களைப் போல சிலா் பறித்து பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பாா்த்த சிலருக்கு சந்தேகம் வந்தது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நகரக் காவல் நிலையத்துக்கும் தகவல் சென்றது. இதையடுத்து இங்கு வந்த காவல் ஆய்வாளா் கோ. சுகுமாரன், உதவி ஆய்வாளா் காமராஜ் உள்ளிட்டோா் அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது பிஎஸ்என்எல் கம்பிகளைப் பழுதுபாா்ப்பதைப் போல நடித்து, அவற்றிலுள்ள காப்பா் வயா்களைத் திருடிச் செல்லும் கூட்டம் என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரகாசம் மகன் சூா்யா, காத்தவராயன் மகன் செல்லதுரை, குப்புசாமி மகன் மணிகண்டன், பிரகாஷ் மகன் மகேந்திரன், சேட்டு மகன் மணிகண்டன், வெங்கடேசன் மகன் சின்னதுரை ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இவா்களிடமிருந்து பொலிரோ வாகனம், கடப்பாரைகள், மண்வெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா் ஊா் ஊராகச் சென்று காப்பா் வயா்களைத் திருடிச் செல்வோா் என்பதும் தெரியவந்தது.
