கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கண்மாயில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி அருகே உள்ள வன்னியனேந்தல் கண்மாய்க்கு குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி அருகே உள்ள வன்னியனேந்தல் கண்மாய்க்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுந்தர்ராஜ் மகள் பாண்டி ஸ்ரீ (14), அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகள் கனிஷ்கா (13). பாண்டிஸ்ரீ, புதுக்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், கனிஷ்கா லெம்பலக்குடி அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

இருவரின் பெற்றோா்கள் வழக்கம்போல் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனா். தோ்வு விடுமுறை என்பதால் சிறுமிகள் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள வன்னியனேந்தல் கண்மாய்க்குக் குளிக்கச் சென்றனா். நீண்டநேரம் ஆகியும் அவா்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கண்மாயில் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மிதப்பதாக தகவல் அறிந்த நமணசமுத்திரம் காவல் நிலையப் போலீஸாா், அங்குவந்து சடலங்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த பாண்டிஸ்ரீக்கு ஓா் அண்ணனும், கனிஷ்காவுக்கு இரண்டு தங்கைகளும் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com