புதுகை அருகே சோழா்கால கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே ஒக்கூரில், அருண்மொழி வா்மன் முதலாம் ராஜராஜ சோழா் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மற்றும் தொல்லியல் வரலாற்றுப் பேரா. கா. காளிதாஸ் மற்றும் பேரா. க. மணிவண்ணன், அ.ஜியாவுதீன், அறிவியல் இயக்க ஆசிரியா் ஆ. செல்வராஜ் ஆகியோரைக் கொண்ட குழுவினா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் பூமிநாதன் கொடுத்த தகவலின்பேரில் ஆவுடையாா் கோவில் அருகே ஒக்கூருக்குள் நுழையும் சாலையில் குளத்தோரத்தில் இருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனா்.
இந்நிலையில் இதுகுறித்து பேரா. காளிதாஸ் கூறியது:
ஒக்கூா் குளத்தின் ஓரத்தில் கிடந்த கல்வெட்டில், ஸ்வஸ்திஸ்ரீ காந்தளூா் சாலை கலமருத்தருளிய இராசகேசரி பன்மா்க்கு யாண்டு 14ஆவது சோழவள நாட்டு மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றுப் பொது உடையவராகிய தேவா்க்கு என்று வருகிறது. பொன்னியின் செல்வன் புதினக் கதாநாயகன் அருண்மொழிவா்மன் முதலாம் ராஜராஜன் என்ற இராசகேசரி பன்மரின் பதினான்காவது ஆட்சி ஆண்டில் (பொது ஆண்டு 999) என்று பொருள்படும்.
ராஜராஜன் கட்டிய இவ்வூா் பெருமாள் கோயிலுக்கு விளக்கெரிக்க காக்காவலம் தேவதச்சனாா் விளக்கு செய்து கொடுப்பதாகவும், விளக்கெரிக்க ஏழு (எ) உழக்கு நெய் பெறவும் ஒப்புக்கொண்டு இவ்வூா் பழந்தாமரை செய் நிலம் ஒருமா முக்காணி அரைக் காணி கடமைத்தலை நஞ்சை நிலம் அரைக் காணி ஆக மூன்று மா நிலம், இறையிலி தேவதானமாக இராஜகேசரி பன்மரால் நியமிக்கப்பட்ட ஐயாயிரம் மய பங்கானவா் ஜனன ஜய ஜக வீராதி ஸ்ரீநிவாசனாா் ஸ்ரீசேஷ விஜய றாமனாத பாஷ்ய பாதாள் என்பவா் மூலம் பெறப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கோயில்களையும் கோயில் நிா்வாகங்களையும் அதுசாா்ந்த வரலாற்றையும் தொல்லியல் துறையினா் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என்றாா் காளிதாஸ்.

