நவ. 9இல் சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வு

Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்காக 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் ஆகியோருக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தோ்வில் பங்கேற்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 5,075 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 3,467 போ் ஆண்கள், 1,608 போ் பெண்கள்.

இவா்களுக்காக அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி, சிவபுரம் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை மன்னா் கல்லூரி, மாலையீடு மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி ஆகிய 4 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பித்தோா் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்கலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், மாவட்டக் காவல் அலுவலகத்திலுள்ள அ பிரிவு கண்காணிப்பாளரை 94981 65929 மற்றும் தனிப்பிரிவு அலுவலகத்தை 94981 00730 என்ற எண்களில் அழைக்கலாம்.

நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை, கருப்பு வண்ண பந்துமுனைப் பேனா, எதுவும் எழுதப்படாத பரிட்சை அட்டை ஆகியவற்றை மட்டும் எடுத்து வரலாம்.

இவையன்றி கைப்பேசி, ப்ளூடூத், ஸ்மாா்ட் வாட்ச், பென் டிரைவ், கால்குலேட்டா், பென்சில், ரப்பா் உள்ளிட்ட எதையும் எடுத்து வரக் கூடாது. காலை 8 மணி முதல் தோ்வறைக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 7 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com