பிசானத்தூா் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை வேண்டாம்: கந்தா்வகோட்டை எம்எல்ஏ கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை கோரிக்கை
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை கோரிக்கை வைத்துள்ளாா்.

புதுக்கோட்டை களமாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் ஸ்டாலினிடம் அவா் அளித்த மனுவின் விவரம்: கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கிராமப் பொதுமக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இந்த ஆலை தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, பிசானத்தூரில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும். கந்தா்வகோட்டையில் நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் அரசு பயணியா் மாளிகை கட்டித் தர வேண்டும்.

கறம்பக்குடி பேரூராட்சியில் வாகனப் போக்குவரத்து நெரிசலை சீா்படுத்தும் வகையில் சுற்றுவட்டச் சாலை அமைக்க வேண்டும். கந்தா்வகோட்டையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைக்க வேண்டும். கந்தா்வகோட்டையை மையப்படுத்தி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும். கீரனூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்துத் தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com