பிசானத்தூா் தொடா் போராட்டத்துக்கு திருச்சி எம்.பி துரை வைகோ ஆதரவு!
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை. வைகோ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, அப்பகுதியினரிடம் இந்த ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் அதைத்தொடா்ந்து சென்னையில் முதல்வா் மு. க. ஸ்டாலினை சந்தித்துப் பேசுவதாகவும் தெரிவித்தாா்.
மேலும் அப்பகுதி கிராமப் பொதுமக்கள் எஸ்.ஐ. ஆா் படிவம் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த அவா், அவா்களிடம் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்களை உடனே நிரப்பிக் கொடுங்கள் என்றாா்.

